பிடிவாரண்டு குற்றவாளிகளை கைது செய்ய 30 தனிப்படை
குமரியில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்ய 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
நாகர்கோவில்
குமரியில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்ய 30 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
சூப்பிரண்டு பேட்டி
குமரி மாவட்டத்தில் திருட்டு, போதை பொருட்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டமும் நடந்தது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் போலீசாரின் தொடர் நடவடிக்கையால் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. கஞ்சா வியாபாரிகள் பலரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
30 தனிப்படை
குமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 30 தனிப்படை அமைக்கப்பட்டு, ஒரு குழுவில் 10 போலீசார் வீதம் மொத்தம் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குமரி-கேரள எல்லையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கேரள மற்றும் குமரி போலீசார் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். போதை பொருட்கள் விற்பனை பற்றி தெரிந்தால் உடனே போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுக்க வேண்டும். தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.