ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
பிடிவாரண்டு
கோபி அருகே உள்ள சுண்டபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). விவசாயி. இவருக்கும், இவருடைய மகன்களுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி அன்று மர்மமான முறையில் வீட்டில் பழனிச்சாமி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சொத்துக்காக பழனிச்சாமியை கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார். தற்போது சோமசுந்தரம் ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.