ஓசூரில்விவசாயி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைதுபரபரப்பு வாக்குமூலம்
ஓசூர்
ஓசூரில் விவசாயி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில் நிலத்தை கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டதால் கொன்றதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விவசாயி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவராம் (வயது 52) விவசாயி.. இவர், கடந்த 8-ந் தேதி காரில் ஜூஜூவாடி பகுதியில் சென்ற போது மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழி மறித்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நிலத்தகராறில் சிவராமை, 6 பேர் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் தலைமையில் தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), சீனிவாசன் என்கிற காந்தி (26) ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் போச்சம்பள்ளி கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
4 பேர் கைது
இந்தநிலையில் விவசாயி கொலை வழக்கில் போலீசாரால் தேப்பட்டு வந்த பேரிகையை சேர்ந்த முரளி (27), திலீப்குமார் (28), ஓசூர் ஜூஜூவாடியை சேர்ந்த மகேந்திரன் (32) மற்றும் ஊத்தங்கரை அருகே ஆனந்தூரை சேர்ந்த சிம்பு என்பவரின் மனைவி அனுசுயா (23) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
ஜூஜூவாடி காந்தி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சீனிவாசன் என்ற காந்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். குத்தகை காலம் முடிந்த பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை மூலம் அந்த நிலம் பொது ஏலம் விடப்பட்டது. அப்போது, சீனிவாசனுக்கு எதிராக, சிவராம் அதிக தொகைக்கு ஏலம் கோரினார்.
இதனால் சீனிவாசன் பலமுறை எச்சரித்தும் சிவராம் கண்டு கொள்ளவில்லை. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று காரில் சென்றபோது சிவராமை வழிமறித்து மிளகாய் பொடி தூவி கொலை செய்ததாக தெரிவித்தனர்.