குமுளியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
குமுளியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கண்காணித்தனர். அப்போது அவர்கள், பஸ்சில் ஏற வரும் பயணிகளிடம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த ஹக்கீம் (வயது 62), வடக்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் (50), தேனி வாழையாத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 330 மற்றும் 82 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.