தமிழக ஜீப் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்; கேரள வாலிபர் கைது


தமிழக ஜீப் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்; கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 2:30 AM IST (Updated: 8 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழக ஜீப் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேனி மாவட்டம் கம்பம் சவுடம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 45). ஜீப் டிரைவரான இவர், கடந்த 5-ந்தேதி தனது ஜீப்பில் பெண் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் சேத்துக்குழி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பணிகளை முடித்துவிட்டு மாலை கம்பம் நோக்கி புறப்பட்டார். கேரள மாநிலம் கம்பம்மெட்டு அருகே கருணாபுரம் பகுதியில் ஜீப் வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சாலி, வினோத், பிஜோ தாமஸ், மந்திப்பாறையை சேர்ந்த ஜின்ஸ் ஆகியோர் ஜீப்பை வழிமறித்து, சதீஷ்குமாரிடம் தகராறு செய்ததுடன் அவரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீசார் விசாரணை நடத்தி, ஜீப் டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சாலி, வினோத், பிஜோ தாமஸ் ஆகிய 3 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் தமிழக-கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், கேரள போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்யவில்லை என தேனி மாவட்ட போலீசாரிடம் தமிழக ஜீப் டிரைவர்கள், தோட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேனி மாவட்ட போலீசார், கேரள மாநில போலீசாரிடம் பேசினர். அதன்பேரில் கேரள போலீசார், ஜீப் டிரைவர் சதீஷ்குமார் கொடுத்த புகார் மனு மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடிப்படையில் நேற்று வழக்கை திருத்தம் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஜின்ஸ் (34) என்பவரை கைது செய்தனர். மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சாலி, வினோத், பிஜோ தாமஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story