கியாஸ் சிலிண்டருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 17 பேர் கைது


கியாஸ் சிலிண்டருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 17 பேர் கைது
x

கிறிஸ்தவ ஆலய குடியிருப்புக்குள் கியாஸ் சிலிண்டருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்துபவர்களில் பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த ஆலயத்தின் பங்குத்தந்தை பெல்லார்மின் அரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் ஏசு சபையின் நிர்வாகத்தின் கீழ் பள்ளி மற்றும் ஆலயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிர்வாகத்திற்கு சிலர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே இந்த ஆலயத்திற்கு உட்பட்ட பங்குத்தந்தையின் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பின் உள்புறத்தில் தாளிட்டு கொண்ட அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்வோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த கியாஸ் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரூர் போலீசார் போராட்டம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சூசை (வயது 42), செல்வநாயகம் (51) மற்றும் 7 ஆண்கள், 8 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story