கம்பம் அருகே டீக்கடைக்காரர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கம்பம் அருகே டீக்கடைக்காரர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது 42). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனா (35). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெகதீஷ்குமார் (38) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த அழகுபகவதி, தனது மனைவியையும், ஜெகதீஷ்குமாரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அழகுபகவதியை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சிவசக்தி (24), பாலமுருகன் (27), சதீஷ்குமார் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் அழகுபகவதி கொலை வழக்கில் கைதான 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் ஜெகதீஷ்குமார் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.