முன்னாள் எம்.பி. ராமலிங்கம் உள்பட 5 பேர் கைது
பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்தது தொடர்பாக முன்னாள் எம்.பி. உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 45 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்தது தொடர்பாக முன்னாள் எம்.பி. உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 45 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாரதமாதா நினைவாலயம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி பா.ஜனதா கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தலைமையில் தர்மபுரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் பா.ஜனதாவினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க சென்றனர்.
அப்போது நினைவாலயத்தில் கேட் பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கேட்டை திறக்குமாறு அங்கு பணியில் இருந்த மணிமண்டப காப்பாளரிடம் கட்சி நிர்வாகிகள் கேட்டனர். அதற்கு அவர் சுதந்திர தினம் மற்றும் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நாட்களில் மட்டும் தான் நினைவாலய கேட் திறந்து வைக்கப்படும். மற்ற நாட்களில் கேட்டின் முன்பு இருந்தபடி மரியாதை செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
50 பேர் மீது வழக்கு
இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கேட்டின் பூட்டை கல்லால் உடைத்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த வேறு ஒரு பூட்டை கேட்டில் போட்டுவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து மணிமண்டப காப்பாளர் சரவணன் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காந்திசெல்வன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பொது இடத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் எம்.பி. கைது
இதனிடையே பென்னாகரம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சிவலிங்கம் (வயது 33), நிர்வாகிகள் ஆறுமுகம் (39), மவுனகுரு (36), மணி (53) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிவலிங்கம் தவிர 3 பேரை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிவலிங்கம் உடல்நலக்குறைவால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கத்தை கைது செய்ய பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டிக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டில் ராமலிங்கத்தை கைது செய்து பென்னாகரத்திற்கு அழைத்து வந்தனர்.
பரிசோதனை
அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அவருடைய உடல் நிலையை பரிசோதிப்பதற்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது தனக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நேற்று இரவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் 45 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.