முகநூலில் பெண்ணை தவறாக சித்தரித்த என்ஜினீயர் கைது


முகநூலில் பெண்ணை தவறாக சித்தரித்த என்ஜினீயர் கைது
x

கல்லூரியில் படித்த போது காதலை ஏற்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி அவரை தவறாக சித்தரித்த தூத்துக்குடி என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

கல்லூரியில் படித்த போது காதலை ஏற்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி அவரை தவறாக சித்தரித்த தூத்துக்குடி என்ஜினீயரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

போலி முகநூல் கணக்கு

திண்டுக்கல்லை சேர்ந்த 30 வயது பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, தன்னை அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்யப்படுவதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தூத்துக்குடி மார்க்கெட் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 32) என்பவர், பெண்ணின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பெண்ணை தவறாக சித்தரித்து பதிவுகள் செய்தது தெரியவந்தது.

என்ஜினீயர் கைது

இதைத்தொடர்ந்து என்ஜினீயர் பிரவீனை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணும், கைதான என்ஜினீயரும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை, என்ஜினீயர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் என்ஜினீயரின் காதலை அந்த பெண் கடைசி வரை ஏற்காமல் விலகி சென்று விட்டார். இதனால் அந்த பெண் மீது ஆத்திரத்தில் இருந்த என்ஜினீயர், அவரை எப்படியாவது பழிவாங்கி விடவேண்டும் என்று நினைத்து உள்ளார். இதையடுத்து பெண்ணின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பலரை நண்பர்களாக்கி இருக்கிறார்.

பின்னர் அந்த பெண்ணை பற்றி தவறான எண்ணங்கள் தோன்றும் வகையில், முகநூலில் நட்பில் இருக்கும் ஆண்களுக்கு செய்திகளை அனுப்பி இருக்கிறார். அதன்மூலம் அந்த பெண்ணுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்து பழிவாங்க நினைத்து சிக்கி கொண்டதாக போலீசார் கூறினர்.


Next Story