'மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்தியதால் கொலை செய்தேன்'; தொழிலாளி கொலை வழக்கில் கைதான மகன் வாக்குமூலம்
வேடசந்தூர் அருகே தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அவரது மகன், மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
வேடசந்தூர் அருகே உள்ள டி.அய்யம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (45). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அதில் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். மூத்த மகன் சரவணக்குமார் (20). இளைய மகன் சிவா (17).
இந்தநிலையில் நேற்று இரவு காளியப்பனை, அவரது மகன் சரவணக்குமார் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை குத்திக்கொன்ற சரவணக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் சரவணக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காளியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதையில் காளியப்பன், தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததுடன், அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அதன்படி, நேற்று இரவும் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்து, பாக்கியத்திடம் காளியப்பன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்த சரவணக்குமார் தட்டிக்கேட்டார். உடனே காளியப்பன் தனது மகனை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த சரவணக்குமார், அருகில் இருந்த கத்தியை எடுத்து காளியப்பனை குத்திக்கொலை செய்ததாக சரவணக்குமார் வாக்குமூலம் அளித்தார்.
தந்தையை மகன் குத்திக்கொலை செய்த சம்பவம் டி.அய்யம்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.