25 கிலோ கஞ்சா கடத்திய மூதாட்டி கைது


25 கிலோ கஞ்சா கடத்திய மூதாட்டி கைது
x

தர்மபுரி அருகே 25 கிலோ கஞ்சாவை கடத்திய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி அருகே 25 கிலோ கஞ்சாவை கடத்திய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பறிமுதல்

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வன் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க துணை ேபாலீஸ் சூப்பிரண்டு வினோத், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி அருகே பூசாரிப்பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் நின்று இருந்த மூதாட்டியிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 65) என்பது தெரிந்தது. கஞ்சா வியாபாரியான இவர் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை வாங்கி கொண்டு புறப்படும்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதையடுத்து போலீசார் பூங்கொடியை கைது செய்தனர்.

74 பேர் பட்டியல்

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் கூறியதாவது:-

பூங்கொடி மீது கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவருடைய மகன் சந்தோஷ் (30) அண்மையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பு உடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவரிடம் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவருக்கு கஞ்சாவை கடத்தி வந்து கொடுத்த ஆந்திராவை சேர்ந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

தர்மபுரி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 74 பேரின் பட்டியல் கிடைத்துள்ளது. இதில் சில பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தர்மபுரி உட்கோட்ட பகுதியில் 12 கிராமங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story