கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி சவுந்திரபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 23). கூலித்தொழிலாளி. இவர், அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது தான் நிறுத்திய இடத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோட்டார்சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் வீரமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு சோழவந்தான் செல்லும் சாலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளப்பட்டியை சேர்ந்த தமிழ்பாண்டி (21) என்பவர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் வீரமுத்துவுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.