கூலிப்படையை வைத்து கொன்ற மாமியார் கைது


கூலிப்படையை வைத்து கொன்ற மாமியார் கைது
x

பாலக்கோடு அருகே தொழிலாளியை கூலிப்படையை வைத்து கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தொழிலாளியை கூலிப்படையை வைத்து கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19-ந் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா (வயது 41) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மாமியாரே மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சூர்யாவின் மாமியார் காரிமங்கலத்தை சேர்ந்த சகுந்தலா (47) பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

மாமியார் கைது

எனது மகள் சாமுண்டீஸ்வரி (32)க்கும் சூர்யாவுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது மகள் சாமுண்டீஸ்வரி தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சூர்யா மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மகளிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து எனது மகள் கூறினாள்.

இதனால் சூர்யா இறந்தால்தான் தனது மகள் நிம்மதியாக இருப்பாள் என கருதி சூர்யாவை காரிமங்கலம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 பேர் மூலம் கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று அவர்களிடம் சூர்யாவுக்கு மது வாங்கி கொடுக்க கூலி பணம் கொடுத்து அனுப்பினேன். அதன்படி அவர்கள் சூர்யாவுக்கு மதுவாங்கி கொடுத்தனர். பின்னர் போதை ஏறியதும் சூர்யா மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது கூலிப்படையை சேர்ந்த 2 பேரும் சூர்யாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சகுந்தலாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story