உத்தமபாளையம் அருகே கஞ்சா வழக்கில் 4 பேர் கைது
உத்தமபாளையம் அருகே கஞ்சா பதுக்கிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம் அருகே ஒத்தப்பட்டியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது ஒத்தப்பட்டியை சேர்ந்த பால முருகன் (வயது32), ராமர் (38), கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ராயப்பன்பட்டியை சேர்ந்த அமலன் (29) என்பவர் திருச்சியில் விற்பனை செய்வதற்காக பாலமுருகனிடம் கஞ்சாவை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், ராமர், பிரகாஷ், அமலன் ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போல் தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமக்காபட்டியில், அதே ஊரை சேர்ந்த பாலுசாமி (82) கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து பாலுசாமியை போலீசார் கைது செய்தனர்.