ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 2 பேர் கைது
பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் மூலம் கஞ்சா
பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆன்லைன் மூலம் கூகுள் பே, போன் பே, பேடி எம் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மது விலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், பசவராஜ், சண்முகராஜன், செந்தில், சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அனுமந்தபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றனர்.
௨பேர் கைது
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று ஆரதஅள்ளி கூட்ரோடு பகுதியில் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது 21 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலங்களாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் காரிமங்கலம் அருகே ஆலமுரசுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது40), வையாலி கொட்டாய் பகுதியை ராமமூர்த்தி (30) என்பதும், ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.
மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பொட்டலங்களாக கட்டி பாலக்கோடு, காரிமங்கலம் பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள், 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.