மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது


பெரும்பாலை அருகே டிரைவரை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கில் மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தர்மபுரி

ஏரியூர்:

பெரும்பாலை அருகே டிரைவரை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கில் மனைவி, கல்லூரி காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எரிந்த நிலையில் பிணம்

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாதி எரிந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பிணமாக கிடந்தார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டியை சேர்ந்த டிரைவர் மணி (வயது 30) என்பதும், இவருக்கு திருமணமாகி அம்சவள்ளி (24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் அம்சவள்ளி உள்ளிட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அம்சவள்ளிக்கும், மாங்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதல் இருந்து வந்ததும், இவர்கள் அதேபகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான லோகேஷ் (23) என்பவருடன் சேர்ந்து மணியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கல்லூரி காதல்

தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று சந்தோசை பெரும்பாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த லோகேசையும் தனிப்படை போலீசார் பிடித்து வந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அம்சவள்ளி, சந்தோஷ், லோகேஷ் ஆகிய 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அம்சவள்ளி தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படித்து வந்த சந்தோசுக்கும், அம்சவள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் மணிக்கும், அம்சவள்ளிக்கும் திருமணம் நடைபெற்றது. இதனிடையே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

தீவைத்து எரிப்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து அம்சவள்ளி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில், கணவன்-மனைவியை அழைத்து போலீசார் சமாதானம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அம்சவள்ளி, கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். இருப்பினும் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத அம்சவள்ளி, மணியை கொலை செய்ய முடிவு செய்து தனது காதலன் சந்தோசுடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.

சம்பவத்தன்று மணிக்கு பணம் கொடுத்து அம்சவள்ளி மது குடிக்க வைத்துள்ளார். போதை ஏறியதும் தனது திட்டத்தை அரங்கேற்ற தனது காதலன் சந்தோசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சந்தோஷ், அம்சவள்ளி மற்றும் லோகேஷ் ஆகிய 3 பேரும் மீண்டும் மணிக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். போதை ஏறியதும் சந்தோஷ், லோகேசுடன் மோட்டார் சைக்கிளில் மணியை பெரும்பாலைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்குள்ள நரசிபுரம் சுடுகாடு பகுதியில் வைத்து, கை கால்களை கட்டி போட்டு 2 பேரும் மணியை கொலை செய்துள்ளனர்.

3 பேர் கைது

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து மணியின் உடல் மீது ஊற்றி, தீ வைத்து எரித்து விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டதும், தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிக்கி கொண்டதாக அவர்கள் 3 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அம்சவள்ளி, இவரது கல்லூரி காதலன் சந்தோஷ், உடந்தையாக இருந்த லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story