பாலிடெக்னிக் மாணவனை கடத்திய 7 பேர் கைது


பாலிடெக்னிக் மாணவனை கடத்திய 7 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் ரூ.1 கோடி கேட்டு பாலிடெக்னிக் மாணவனை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோட்டில் ரூ.1 கோடி கேட்டு பாலிடெக்னிக் மாணவனை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலிடெக்னிக் மாணவன்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். நிதி நிறுவன அதிபர். இவருடைய மகன் சாம்சரண் (வயது 17). திருச்செங்கோடு பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவனை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் அந்த நபர்கள் சிவக்குமாரை தொடர்பு கொண்டு உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம். உயிரோடு வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாணவனை மீட்க அவர் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

7 பேர் கைது

அதன்பேரில் தனிப்படை போலீசார் அந்த நபர்களின் செல்போன் சிக்னலை வைத்து சூளகிரியில் மாணவனை மீட்டனர். மேலும் மாணவனை கடத்திய 7 பேரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பாலக்கோடு அக்ரஹார தெருவை சேர்ந்த ரித்தீஷ்குமார் (23), தனது நண்பர்களான அருண்குமார் (33), விஜி (30), சந்தோஷ் (22), முரளி (32), முருகேசன் (38), கோகுல் (30) ஆகியோருடன் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், 7 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சிவக்குமார் நிதி நிறுவன அதிபர் என்பதால் அவரது மகனை கடத்தி பணம் பறிக்க ரித்தீஷ்குமார் முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.1 கோடி கேட்டு மாணவனை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மாணவனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story