ரேஷன் அரிசி கடத்தலில் தேடியவரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் தேடியவரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சத்தியமூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்களையும், ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி, நேற்று கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டவுடன் வீட்டின் பக்கவாட்டில் குதித்து சத்தியமூர்த்தி ஓடினார். அவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் சீனிமா பாணியில் விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.