2-வது திருமணம் செய்த தொழிலாளி கைது
ஊத்தங்கரை அருகே முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் 2-வது திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள கொட்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (31). இவர்களுக்கு 2017-ம் அண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணன், அவரது அக்கா அலமேலுவின் மகள் புவனேஸ்வரியை கடந்த 2021-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதுகுறித்து பிரேமா ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் தான் இருக்கும் போது 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
கைது
அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தார். மேலும் வேடியப்பன் (65), பத்மா (63), புவனேஸ்வரி (22), குழந்தைவேல் (47), அலமேலு (45), தமிழ்மணி (39), சுகந்தி (37), காந்தன் (34) ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.