இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது
ராயக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள வரகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த முருகேஷ் தரப்பினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. பிரச்சினைக்குரிய நிலத்தில் சிவக்குமாரின் தந்தை லட்சுமப்பா கழிவறை கட்டினார். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சிவக்குமார், அவரது தந்தை லட்சுமப்பா, தாயார் லட்சுமியம்மா, 11 வயது சிறுவன் ஆகியோரை முருகேஷ் தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த லட்சுமப்பா பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவக்குமார் உள்பட 3 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் சிவக்குமார் புகார் செய்தார். இதையடுத்து முருகேஷ், மாதேஷ், சிவப்பா, கவுரம்மா, சாரதா ஆகிய 5 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் சாரதா கொடுத்த புகாரின் பேரில் லட்சுமப்பா, அஞ்சப்பா, சிவக்குமார், மஞ்சு ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோதல் தொடர்பாக கவுரம்மா (55), அவரது மகன் மாதேஷ் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.