ஜாமீனில் வந்த வாலிபர் கொலை வழக்கில் 8 பேர் கைது
ஓசூரில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு பழிக்குப்பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்
ஓசூர்:
ஓசூரில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு பழிக்குப்பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் முரளி (வயது 20). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). இவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த முரளியை சில நபர்கள் காரில் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அவரை பெத்தகொள்ளு என்னும் இடத்தில் அந்த நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு பழிக்குப்பழியாக முரளி வெட்டிக்ெகாலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். கடந்த 28.2.2022 அன்று அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி முரளியை (தற்போது கொலை செய்யப்பட்டவர்) கைது செய்தனர். அவர் அந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முரளி, ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தான் முரளி கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதயகுமார் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.
8 பேர் கைது
இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய ஓசூர் அந்திவாடி நாகராஜ் மகன் சரவணன் (31), ஒன்னுப்பள்ளி மாதேஷ் (28), கொரட்டகிரி ரகு (21), தொட்டபிளி முத்திரை நவீன்குமார் (21), திம்மசந்திரம் மதன்குமார் (25), குருப்பட்டி நவீன்குமார் (20), மிடிகிரிப்பள்ளி சுனில் (29), பரத் (27) ஆகிய 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சரவணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-
எனது அண்ணன் உதயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் முரளி முதல் குற்றவாளி ஆவார். அவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த முரளி, ஜாமீனில் வெளியே வந்த தகவல் அறிந்தேன். எனது அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக முரளியை தீர்த்து கட்ட திட்டமிட்டேன். அதன்படி மது குடிக்க அவனை அழைப்பது போல அழைத்து வந்து, சரமாரியாக வெட்டிக்கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.