பழனி அருகே தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தில் 2 பேர் கைது
பழனி அருகே தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறினார்.
பழனி அருகே தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறினார்.
காவலாளி மீது துப்பாக்கிச்சூடு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிலாங்குடியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). இவர், பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் தனியார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த கார்த்தி (24) காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடன், மோகன்ராஜ் நண்பர் மானுரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) இருந்துள்ளார்.
கடந்த 29-ந்தேதி மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்தில் காவல் பணியில் இருந்தபோது, திடீரென கார்த்தி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். இவருக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இந்நிலையில் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் குறித்து இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று பழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தோட்டத்தில் இருந்த மோகன்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், 'ஏர்கன்' எனப்படும் துப்பாக்கி, அதில் பயன்படுத்தப்படும் அலுமினிய தோட்டாக்களை மோகன்ராஜ் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு உரிமம் தேவையில்லை என்பதால், அதை பயன்படுத்தி முயல் உள்ளிட்ட வனவிலங்குளை அவர்கள் வேட்டையாடி வந்துள்ளனர்.
கடந்த 28-ந்தேதி இரவு மோகன்ராஜ், துப்பாக்கியில் குண்டுகளை போட்டு சுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக அதன் டிரிகரை அழுத்தியுள்ளார். அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு கார்த்தி மீது பாய்ந்து காயமடைந்தார் என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
மேலும் தோட்டத்து அருகே உள்ள கிணற்றில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி கிளப்பை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் துப்பாக்கியில் மோகன்ராஜூம், அவருடைய நண்பருமான கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து சிறிய மாற்றங்கள் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காயம்பட்டு சிகிச்சை பெற்று வரும் கார்த்தி மீது திருவிடைமருதூர் போலீஸ்நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. எனவே இதுபற்றி உடனடியாக அந்த போலீஸ்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். மாவட்டம் முழுவதும் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.