ரெயில்வே தண்டவாளத்தில் வீசிய மனைவி, கள்ளக்காதலன் கைது


தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே கணவனை கொன்று ரெயில்வே தண்டவாளத்தில் வீசிய மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே கணவனை கொன்று ரெயில்வே தண்டவாளத்தில் வீசிய மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தண்டவாளத்தில் பிணம்

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் தர்மதுரை (வயது 36). இவரது மனைவி பிரபாவதி. இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தர்மதுரை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் தர்மதுரை மகுடஞ்சாவடி-வீரபாண்டி இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் நடந்த வழக்கு ஒன்றில் சிக்கிய கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தர்மதுரை கொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளியில் நடந்ததால் வழக்கு கடத்தூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து பிரபாவதி, கள்ளக்காதலன் கோவிந்தராஜ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை தோசைக்கல்லால் தலையில் அடித்து கொன்றதும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து உடலை காரில் ஏற்றி ரெயில் தண்டவாளத்தில் வீசியதாகவும் பிரபாவதி தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று கணவனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய பிரபாவதி, கள்ளக்காதலன் கோவிந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story