பழனி, வேடசந்தூர் பகுதிகளில் சூதாடிய 18 பேர் கைது
பழனி, வேடசந்தூர் பகுதிகளில் சூதாடிய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் பணம் வைத்து சூதாடுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அழகாபுரியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 8 பேர் கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் சுற்றி வளைத்து 8 பேரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்களை கூம்பூர் போலீசாரிடம், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்டவர்கள் அதே ஊரை சேர்ந்த பெருமாள் (வயது 52), செந்தில்குமார் (40), பரமேஸ் வரன் (45), மற்றொரு செந்தில்குமார் (45), கோபாலகிருஷ்ணன் (28), சக்திவேல் (31), மாரியப்பன் (42), முத்துசாமி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.14 ஆயிரத்து 600 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பழனி டவுன் மூலக்கடை பகுதியில் பணம் வைத்து கேரம் விளையாடுவதாக பழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில், முருகானந்தம் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கேரம் போர்டு, ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.