போலி டாக்டர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ குழுவினர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) அன்பரசு, ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜீவ்காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இருதுக்கோட்டை கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மருந்து கடை ஒன்றின் அருகே தனி அறையில் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
போலி டாக்டர் கைது
இதையடுத்து மருத்துவ குழுவினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஒன்னுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணன் (வயது50) என்பதும், பிளஸ்-2 படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததும். அவர் போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவ குழுவினர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலி டாக்டர் அஸ்வத் நாராயணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.