கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது
கிருஷ்ணகிரியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். யூடியூப்பை பார்த்து குண்டு தயாரித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். யூடியூப்பை பார்த்து குண்டு தயாரித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீச்சு
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வாஞ்சி என்கிற சதீஷ் (வயது 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தில் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை அவரது வீடு முன்பு வீசி சென்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலையில், வெங்கடாசலபதி என்பவரின் தையல் கடை மீது கடந்த 10-ந் தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இது தொடர்பாக அவரது கடைக்கு அருகில் வசிக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சந்திரசேகர் என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
4 பேர் கைது
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 2 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அதில் வாஞ்சி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (22), கிருஷ்ணகிரி அம்மன் நகர் நித்திஷ் என்கிற சைனா (22), சூளகிரி சின்னார் மோனிஷ் (25), கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த தனுஷ் (22) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக வாஞ்சியை கொலை செய்ய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிய வந்தது.
மாணவர்கள் சிக்கினர்
அதேபோல தையல் தொழிலாளி வெங்கடாசலபதியின் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜோதி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த காதர் (20), தினேஷ் (19) மற்றும் 18, 19, 17 வயதுடைய 3 கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் விவகாரத்தை தையல் தொழிலாளி கண்டித்ததால் அவரது கடை மீது பெட்ரோல் குண்டை வீசியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைதான மாணவர்கள் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் யூடியூப்பை பார்த்து தாங்கள் பெட்ரோல் குண்டு தயாரித்து கடை மீது வீசியதாக கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.