கர்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்திய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி, தளி பகுதியில் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி குமார் மற்றும் போலீசார் நேரலகிரி சோதனைச் சாவடியில் கே.ஜி.எப். சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளை நிறுத்தி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் அந்த பைக்குள் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் மொத்தம் 333 இருந்தது தெரிய வந்தது.
மதுபாக்கெட்டுகள் கடத்தல்
இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரிமேட்டையைச் சேர்ந்த தேவா (வயது 28) என்றும், பெங்களூருவில் இருந்து மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாக்கெட்டுகள், மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் தொடர்பாக சிக்காரிமேட்டைச் சேர்ந்த சுந்தர்மணி (26) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே கெம்பட்டியில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மதுபாக்கெட்டுகள் இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் தொட்டமஞ்சியை சேர்ந்த சேட்டு (37) என்பதும், பெங்களூருவில் இருந்து மதுபாக்கெட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கர்நாடக மது பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.