கஞ்சா விற்ற 2 பேர் கைது
கிருஷ்ணகிரி, ஓசூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி, ஓசூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மகராஜகடை அருகே கரடிகுறி கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி அருகில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் கே.பூசாரிப்பட்டி போடியப்பன் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்
ஓசூரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் பேளகொண்டப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவதீஷ்குமார் (29) என்பதும், பேளகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.