கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது


கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46). தி.மு.க. பிரமுகர். இவர், கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்து அங்குள்ள கல்குவாரி மற்றும் அந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து சீனிவாசன், சிட்டா அடங்கல் சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர், தான், தாசில்தார் அலுவலகத்தில் பணியில் உள்ளதாகவும், நாளை அலுவலகத்திற்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார். மறுநாள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற சீனிவாசன், அலுவலர் ராமசாமியிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராமசாமி, ஓசூர் தாசில்தார் கவாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார். தாசில்தாரின் அறிவுறுத்தலின் பேரில், ராமசாமி பாகலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக சீனிவாசனை கைது செய்தனர்.


Next Story