கூலிப்படை தலைவன் கைது


கூலிப்படை தலைவன் கைது
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை போலீஸ் ஏட்டு கொலையில் பிரபல ரவுடியான கூலிப்படை தலைவனை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை போலீஸ் ஏட்டு கொலையில் பிரபல ரவுடியான கூலிப்படை தலைவனை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ஏட்டு கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). முன்னாள் போலீஸ் ஏட்டு. இவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் அவரது மனைவியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மகன் ஜெகதீஷ்குமார், மனைவியின் கள்ளக்காதலன் கமல்ராஜ், பெண் சாமியார் சரோஜா, கூலிப்படையை சேர்ந்த ராஜபாண்டியன், விஜயகுமார் மற்றும் பாவக்கல்லைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன் (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் மகன் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்ற 5 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி வெள்ளைச்சாமி செயல்பட்டுள்ளார். அவர் தான் கூலிப்படையின் தலைவனாக இருந்து, திட்டம் வகுத்து கொடுத்தது, ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் சித்ராவிடம் வாங்கி கூலிப்படைக்கு ஆட்களை அனுப்பி கொலை செய்தது, பிணத்தை கிணற்றில் போட்டது போன்ற வேலைகளை செய்திருந்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர்.

பிரபல ரவுடி கைது

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ஒரு கார், ரூ.17 ஆயிரத்து 500, 2 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் ஏட்டு செந்தில்குமார் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வெள்ளைச்சாமியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கூலிப்படை தலைவன்

ஊத்தங்கரை அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ரவுடி ஆவார். ஊத்தங்கரை ஜோதி நகர் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த சிவக்குமார் கொலை செய்யப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அருகே உடல் வீசப்பட்டது. அந்த வழக்கில் வெள்ளைச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வந்த வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சித்ராவின் கணவரான செந்தில்குமாரை கொலை செய்துள்ளார். இதற்காக ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பெற்று, கூலிப்படையினர் உதவியுடன் உடலை கிணற்றில் போட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story