கருவாட்டு லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவா கைது
ஆண்டிப்பட்டி அருகே கருவாட்டு லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவா கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் போலீஸ் சோதனை சாவடியில் கடந்த மாதம் 14-ந்தேதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கருவாடு ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கஞ்சாவை கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி முழுவதும் சோதனை செய்தனர். இதில், 1,200 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் வந்த 3 பேரை கைது செய்தனர். மேலும் 1,200 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் கஞ்சா கடத்தலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் ஒடிசா மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதையடு்த்து தேனி மாவட்ட போலீசார் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு ஒடிசா மாநில போலீசாரின் உதவியுடன், துப்புலவாடா பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணகாந்த பல்லாவ்வை (வயது 52) கைது செய்து ஆண்டிப்பட்டிக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணகாந்த பல்லாவ், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.