ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய புரோக்கர் கைது
கந்திகுப்பம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய நில புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பர்கூர்
கந்திகுப்பம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய நில புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரில் கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பாலேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 63). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் புதுச்சேரியை சேர்ந்த சக்திவேல், சங்கர் ஆகியோரிடம் தொழில் ரீதியாக ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை திருப்பி ெகாடுக்காததால் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் பாபு மோட்டார் சைக்கிளில் வரட்டனப்பள்ளிக்கு சென்றபோது சக்திவேல், சங்கர் ஆகிய 2 பேரும் வழிமறித்து அவரை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து பாபு மனைவி ராஜேஸ்வரி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரியல் எஸ்டேட் அதிபரை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு விரைந்தனர்.
மீட்பு-கைது
இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமையிலான போலீசார் கந்திகுப்பம் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரியல் எஸ்டேட் அதிபர் பாபு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டனர்.
காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நில புரோக்கர் சக்திவேல் (46) என்பதும், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பாபுவை காரில் கடத்தி சென்றது தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தி காரை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.