தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
சூளகிரி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சூளகிரி
சூளகிரி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண் சாவு
சூளகிரி அருகே உள்ள கானலட்டியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஷில்பா (40). குடும்ப தகராறு காரணமாக ஷில்பா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஷில்பாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அட்டகுறுக்கியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதுதொடர்பாக போலீசார், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சிவராஜை கைது செய்தனர்.
18 பேர் மீது வழக்கு
இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தன்னை தடுத்து நிறுத்தி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் சவுந்தர்ராஜன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட நரசிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.