வத்தலக்குண்டுவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
வத்தலக்குண்டுவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வத்தலக்குண்டுவில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் வத்தலக்குண்டு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கன்னிமார்கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படி 2 பெண்கள் உள்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
22 கிலோ கஞ்சா பறிமுதல்
விசாரணையில் அவர்கள் மல்லையாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 35), சித்தையன்கோட்டையை சேர்ந்த விஜயராஜன் (26), வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த பாரதிதாசன் மனைவி பாண்டிசெல்வி (35), சுந்தரராஜ் (49), மதுரை மாவட்டம் உசிலம்பட்டிைய சேர்ந்த அழகர்சாமி மனைவி சித்ரா (31) என்றும், பாண்டிசெல்வி வீட்டில் கஞ்சாவை வைத்து இவர்கள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாண்டிசெல்வி வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.3 லட்சம் மற்றும் 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.