பெரியகுளம் அருகே வீட்டில் திருட முயன்ற சிறுவன் கைது
பெரியகுளம் அருகே வீட்டில் திருட முயன்ற சிறுவன் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 42). இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப்பட்டு, துணிகள் கீழே சிதறி கிடந்தன.
இதனால் ஸ்ரீநாத்தின் தந்தை மின்விளக்கை போட்டார். அப்போது வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுவன், அவரை தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். இதனால் சுதாரித்துக்கொண்ட ஸ்ரீநாத், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை பிடித்தார். பின்னர் அவனை தென்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட சிறுவன் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.