16 செல்போன்கள் திருடிய பட்டதாரி கைது


16 செல்போன்கள் திருடிய பட்டதாரி கைது
x

சேலத்தில் தனியார் கல்லூரியில் 16 செல்போன்களை திருடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம்

சேலத்தில் தனியார் கல்லூரியில் 16 செல்போன்களை திருடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்போன்கள் திருட்டு

சேலம் அடுத்த உடையாப்பட்டி பைபாஸ் பகுதியில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் 2-ம் ஆண்டில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக தங்களது வகுப்பறையில் உடைமைகளை வைத்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் செய்முறை தேர்வு முடிந்து மீண்டும் வகுப்பறைக்கு வந்தபோது, மாணவர்கள் பைகளில் வைத்திருந்த 16 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களும் புகார் அளித்தனர்.

பட்டதாரி கைது

அதன்பேரில், போலீசார் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவர்களின் செல்போன்களை திருடியது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கார்த்திகேயன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் வேலை செய்து வந்ததும், அம்மாப்பேட்டையில் தனியார் கல்லூரியில் வேலை கேட்டு வந்தபோது, மாணவர்களின் செல்போன்களை திருடியதும் தெரிந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story