கர்நாடக ரியல் எஸ்டேட் அதிபரை எரித்து கொன்ற 2 பேர் கைது


கர்நாடக ரியல் எஸ்டேட் அதிபரை எரித்து கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2023 12:15 PM IST (Updated: 22 May 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே கர்நாடக ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே கர்நாடக ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஒசபுரம் பஸ் ஸ்டாப் பின்புறம் எரிந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெய் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது48) என்பதும், மர்ம நபர்கள் காரில் கடத்தி வந்து அவரை தீவைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ்பாபு ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், இவர் மீது கொலை முயற்சி வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் இருப்பதும் தெரியவந்தது.

2 பேர் கைது

மேலும் பெங்களூரு பசவனாபுரம் பகுதியை சேர்ந்த அமுல்யாராஜ் (42), என்பவரிடம் இருந்து சுரேஷ்பாபு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.35 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். அந்த பணத்தை பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்காமல் அமுல்யாராஜை கொலை செய்து விடுவதாக சுரேஷ்பாபு மிரட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அமுல்யாராஜ், தனது நண்பரான பசவனாபுரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (58) என்பவருடன் சுரேஷ்பாபுவை காரில் கடத்தி சென்று ஒசபுரம் பகுதியில் கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து அமுல்யாராஜ், ஆரோக்கியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story