ரூ.90 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்; திருப்பூர் தொழில் அதிபர் நண்பர்களுடன் கைது


ரூ.90 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்; திருப்பூர் தொழில் அதிபர் நண்பர்களுடன் கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 2:30 AM IST (Updated: 29 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ரூ.90 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக திருப்பூர் தொழில் அதிபர், தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். கரூர் நிதிநிறுவன அதிபர் அளித்த புகாரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரூ.90 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக திருப்பூர் தொழில் அதிபர், தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். கரூர் நிதிநிறுவன அதிபர் அளித்த புகாரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

திருப்பூரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). தொழில் அதிபரான இவர், திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நாமக்கல்லை சேர்ந்த ராஜசேகர் (39), கரூர் ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் (49). நண்பர்களான இவர்கள் 3 பேரும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் கைவசம் உள்ள 2 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே ஷாஜகான் உள்பட 3 பேரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும் கமிஷன் புரோக்கர்களாக செயல்பட்டு வந்தனர். அப்போது கரூர் ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (57) என்பவர் ஷாஜகானை தொடர்பு கொண்டு தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி உள்ளதாகவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி தர வேண்டும். அதற்கு கமிஷனாக ரூ.10 லட்சம் தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய ஷாஜகான், பணத்தை மாற்றி தருவதாக கூறினார். அப்போது சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கொண்டமநாயக்கனூருக்கு வருமாறு கூறினார்.

ரூ.90 லட்சம் கொள்ளை

இதையடுத்து ஷாஜகான் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.90 லட்சத்தை சூட்கேசில் எடுத்துக்கொண்டு, தனது நண்பர்களான ராஜசேகர், குணசேகரன் ஆகியோருடன் காரில் கொண்டமநாயக்கனூருக்கு வந்தார். அப்போது அவர்களை அங்குள்ள தோட்டத்திற்கு சக்திவேல் வரவழைத்தார். அங்கு மற்றொரு காருடன் சக்திவேல் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. பின்னர் ஷாஜகான், அந்த கும்பலிடம் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.90 லட்சத்தை கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள், ஷாஜகானுக்கு பதிலுக்கு பணத்தை கொடுக்கவில்லை.

மாறாக அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி ஷாஜகான் மற்றும் அவருடன் வந்த ராஜசேகர், குணசேகரன் ஆகியோரை மிரட்டினர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் செல்போன்களையும் பறித்துவிட்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.

திடீர் திருப்பம்

இதனால் பணத்தை பறிகொடுத்த ஷாஜகான் உள்பட 3 பேரும் நடந்த சம்பவம் குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த ஷாஜகான், ராஜசேகர், குணசேகரன் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில், திடீர் திருப்பமாக அவர்கள் சக்திவேலிடம் கொடுத்த பணம், ஷாஜகானுக்கு சொந்தமானது இல்லை என்பதும், அந்த பணம் கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சுரேஷ் (41) என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசை அழைத்து போலீசார் விசாரித்தனர்.

மோசடி நாடகம்

விசாரணையில் சுரேஷ் கூறும்போது, என்னிடம் ஷாஜகான் உள்பட 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், தங்களது நண்பரான சக்திவேல் என்பவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி வைத்திருப்பதாகவும், அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தால் ரூ.10 லட்சம் கமிஷன் கிடைக்கும். அதாவது ரூ.1 கோடிக்கு ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும். அதில், நாங்கள் 3 பேரும் கமிஷனாக ரூ.5 லட்சம் எடுத்துக்கொள்கிறோம். மீதி கமிஷன் ரூ.5 லட்சத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினர். இதனால் நானும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.90 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். அதன்பிறகு சக்திவேல் பணத்தை மாற்ற திண்டுக்கல் மாவட்டம் கொண்டமநாயக்கனூருக்கு வருமாறு கூறினார்.

இதனால் கடந்த 25-ந்தேதி நான் ஒரு காரிலும், ஷாஜகான் உள்பட 3 பேர் மற்றொரு காரிலும் அங்கு சென்றோம். அப்போது என்னை ஈசநத்தத்தில் காத்திருங்கள் என்று கூறிவிட்டு 3 பேரும் பணத்துடன் சக்திவேலை சந்திக்க சென்றுவிட்டனர். சில மணி நேரத்தில் என்னை தொடர்பு கொண்டு, எரியோடு போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும், பணத்தை சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுதங்களை காட்டி, மிரட்டி கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் கூறினர். இவர்கள் 3 பேரும், சக்திவேலுடன் சேர்ந்து மோசடி நாடகமாடுவதாக சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக அவர் போலீசில் புகாரும் அளித்தார்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து அந்த புகாரின்பேரில் ஷாஜகான், ராஜசேகர், குணசேகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சக்திவேல் உள்ட 9 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலாயுதம், ஜோதிமுருகன் மற்றும் எஸ்.பி. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


Related Tags :
Next Story