நூதன முறையில் பணம் அபேஸ் செய்தவர் கைது
முதியவர்களிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 144 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதியவர்களிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 144 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நூதன முறையில் அபேஸ்
வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை நூதன முறையில் ஏமாற்றி ஏ.டி.எம். கார்டில் இருந்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் காட்பாடி வடுகந்தாங்கல் அருகே உள்ள பிலாந்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
144 ஏ.டி.எம். கார்டுகள்
கைது செய்யப்பட்ட சுரேஷ் வேலூர், ஆம்பூர், பள்ளிகொண்டா, அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரிலும் ஏராளமான நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.
ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி, தான் பணம் எடுத்து தருவதாக கூறி, ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு எந்திரத்தில் கார்டை செலுத்துவார். மேலும் அவர்களிடம் ரகசிய எண்ணையும் பெற்று, எந்திரத்தில் தவறான ரகசிய எண்ணை போட்டு கார்டில் பணம் இல்லை என்று தெரிவிப்பார்.
அதைத்தொடர்ந்து, தன் கையில் வைத்திருக்கும் மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவர்களிடம் கொடுத்து அனுப்பி விட்டு, அவர்கள் ஏற்கனவே வழங்கிய கார்டினை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விடுவார். இவ்வாறு பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார். அவரிடம் இருந்து 19 வகையான 144 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.35 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.