சண்டை சேவல்களை திருடியவர் கைது
ஆண்டிப்பட்டி அருகே சண்டை சேவல்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 51). இவர் தனது தோட்டத்தில் 40 சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந்தேதி குபேந்திரன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அன்றைய தினம் மாலை தோட்டத்துக்கு வந்து பார்த்தபோது, அவரது 3 சண்டை சேவல்களை காணவில்லை. மர்மநபர்கள் 3 பேர் சேவல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து குபேந்திரன் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் விசாரித்தார். அப்போது ஆண்டிபட்டியில், வைகை அணை சாலையில் உள்ள ஒரு கடையில் அவரது 3 சண்டை சேவல்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குபேந்திரன் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குபேந்திரனின் சேவல்களை திருடி விற்றவர்கள், ரோசனப்பட்டியை சேர்ந்த அஜித் (24), சுந்தரேசன், துரைச்சாமி என்பது தெரியவந்தது. அவர்களில் அஜித்தை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.