திருக்கோவிலூர் அருகே தம்பதியை வழிமறித்து நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவர் கைது
திருக்கோவிலூர் அருகே தம்பதியை வழிமறித்து நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை அருகே உள்ள காங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). இவரது மனைவி செவ்வந்தி (32). சம்பவத்தன்று இவர்கள் இருவரும், மணலூர்பேட்டை- தியாகதுருகம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கூவனூர் அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 பேர், கார்த்திகேயனை வழிமறித்து கத்திமுனையில் 1½ பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் வாகன சோதனையின் போது செங்கம் தாலுகா எறையூர் கிராமத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் ஆபித் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும், கார்த்திகேயன், அவரது மனைவியை வழிமறித்து நகையை பறித்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆபித்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஆபித் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா(23), கண்ணக்குரிக்கை கிராமத்தைச் சேர்ந்த ராம் மகன் செல்வகுமார் (20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதில் செல்வகுமார் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் சிவாவை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் செல்வகுமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.