வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது
முசிறி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்
முசிறி, ஜூலை.2-
முசிறி அருகே உள்ள ஏவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மற்றும் அவரது உறவினர் ஆரோக்கியசாமி (வயது 57) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முசிறியை அடுத்த தாதம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வடிவேல், சிவகாமி நகரை சேர்ந்த பழனிவேல், ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த சுமதி உள்பட 7 பேரிடம் ரூ.9 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் 7 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 7 பேரும் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து பாண்டியன், ஆரோக்கியசாமி ஆகியோர் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேரும் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார். மேலும்ஆரோக்கிய சாமியை தேடி வருகிறார்.