அவமானப்படுத்தும் வகையில் பேசியதால் சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் வாலிபரை கொலை செய்தோம் என கைதானவர்கள் வாக்குமூலம்
அவமானப்படுத்தும் வகையில் பேசியதால் சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் வாலிபரை கொலை செய்தோம் என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவமானப்படுத்தும் வகையில் பேசியதால் சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் வாலிபரை கொலை செய்தோம் என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பூக்கட்டும் தொழிலாளி கொலை
சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 8-ந்தேதி இரவு பூக்கட்டும் தொழிலாளி பாபு (வயது 23) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இக்கொலை தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் வீ.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த நீலமேகம் மகன்கள் சுள்ளான் என்ற வெங்கடாஜலபதி (25), கணேசன் (24), விநாயகமூர்த்தி (23) ஆகியோர் சரண் அடைந்தனர்.
போலீஸ் காவலில் விசாரணை
மேலும் இந்த கொலை சம்பந்தமாக வீ.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை மகன் ராஜு என்ற ராஜீவ் காந்தி (36), மாகாளிகுடி புதுராஜா தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அருண் (21), அலெக்ஸ், ரமேஷ் மகன் ராமு (23), லட்சுமணன் ஆகிய 5 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோர்ட்டில் சரண் அடைந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார்.
வாக்குமூலம்
இது தொடர்பாக 3 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் செல்வோம். பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதில் எங்களுக்கும், சமயபுரம் அருகே உள்ள சேணிய கல்லுக்குடியைச் சேர்ந்த பாபுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் எங்களை பாபு அவமானப்படுத்தும் வகையில் பேசினார். இதனால் அவரை தீர்த்து கட்டுவதற்கு முடிவு செய்தோம். பாபுவிற்கு குடிப்பழக்கம் உண்டு என்பதை அறிந்த நாங்கள், எங்களுடைய நண்பர்களான வீ.துறையூரை சேர்ந்த ராஜு என்ற ராஜீவ் காந்தி, அருண், ராமு, அலெக்ஸ், லட்சுமணன், ஆகியோர் மூலம் பாபுவை செல்போனில் நைசாக பேசி டாஸ்மாக் கடைக்கு வரவழைத்தோம். அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த நாங்கள் மூன்று பேரும் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.
அரிவாள்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் புதரில் வீசப்பட்டிருந்த சுமார் மூன்று அடி நீளம் உள்ள 2 அரிவாள்களையும், முக்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் மாடக்குடி பகுதி அருகே புதரில் வீசப்பட்டிருந்த ரத்தக்கரை படிந்த பேண்ட் மற்றும் ஒரு அரிவாளையும், நொச்சியம் கீழத்தெருவில் வாய்க்கால் பகுதியில் ரத்தக்கரை படிந்த டீ சர்ட் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலீசாரை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பாராட்டினார்.