மைத்துனரை கொலை செய்தது ஏன்? கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம்


மைத்துனரை கொலை செய்தது ஏன்?  கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம்
x

மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

திருநெல்வேலி

மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனியார் நிறுவன மேலாளர்

பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு சுரேஷ் (வயது 35) என்ற மகனும், உமா என்ற மகளும் இருந்தனர்.

உமாவுக்கும், மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ் கைலாஷ் (45) என்பவருக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உமா தனது தாயாரின் வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார்.

மைத்துனர் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். உடனே அங்கு சென்ற கணேஷ் கைலாஷ், மைத்துனர் சுேரஷை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கணேஷ் கைலாஷ் கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் கைலாசை கைது செய்தனர்.

கைதான கணேஷ் கைலாஷ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

தகராறு

மைத்துனர் சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.

எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை சுரேஷ் வாங்கி கொண்டு, குடும்பத்திற்கு செலவிடாமல் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தினார்.

இதுகுறித்து எனது குழந்தைகள் செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று மைத்துனர் சுரேஷை கண்டித்தேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை தூக்கி சுரேஷின் மீது போட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான கணேஷ் கைலாசை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story