சேலத்தில் பரபரப்பு:அரசு பள்ளியில் மதுபோதையில் இருந்த ஆசிரியருக்கு தர்மஅடி-மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக போக்சோவில் கைது
சேலம் அரசு பள்ளிக்கூடத்தில் மதுபோதையில் இருந்த ஆசிரியருக்கு பெற்றோர் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆசிரியர் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரமங்கலம்:
அரசு பள்ளி ஆசிரியர்
சேலம் அருகே சேலத்தாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுரேஷ்பாபு (வயது 48) என்பவர் 5-ம் வகுப்பு ஆசிரியராக இருந்தார்.
இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதும், மாணவிகளின் கழிப்பறை அருகில் நின்று புகை பிடிப்பது, கை, கால்களை பிடித்துவிட சொல்வது என மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது. அப்படி இருந்தும் பள்ளி தலைமை ஆசிரியர், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும், பள்ளியில் நடப்பதை வீட்டில் போய் சொல்லக்கூடாது என மாணவிகளை அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
சரமாரி தாக்குதல்
இதற்கிடையே நேற்று சுரேஷ்பாபு மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆசிரியர் சுரேஷ்பாபுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உதவி கமிஷனர் நாகராஜன், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார், சேலம் மேற்கு தாசில்தார் அருள் பிரகாஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சந்தோஷ், வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
போக்சோ வழக்கில் கைது
பள்ளி ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ்பாபு மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சூரமங்கலம் தாசில்தார் அருள் பிரகாஷ் ஆகியோர் பள்ளியில் முழுமையாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஆசிரியர் சுரேஷ் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
சுரேஷ் பாபு ஆசிரியராக பணியாற்றிய இதே பள்ளியில் அவருடைய மனைவியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.