3 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
3 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
3 பேர் கொலை
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 34), ரிஹான் குரோஷி (25). இவர்கள், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த வெள்ளி வியாபாரி தங்கராஜ் என்பவரை கொலை செய்து வெள்ளி பொருட்களை திருடி செல்ல திட்டம் தீட்டினர். ஆனால் இதுபற்றிய தகவல் அறிந்த தங்கராஜிடம் வேலை செய்த ஆகாஷ், அவரது மனைவி வந்தனகுமாரி மற்றும் உறவினர் சன்னிக்குமார் ஆகிய 3 பேரையும் கடந்த 2020-ம் ஆண்டு தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அஜய்குஷ்வா மற்றும் சூரஜ் ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தினேஷ், ரிஹான் குரோஷி ஆகிய 2 பேரையும் உத்தரபிரதேச மாநிலத்தில் வைத்து இரும்பாலை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
தற்போது அவர்கள் சேலம் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் 3 கொலைகளை மிகவும் கொடூரமாக செய்துள்ளதாலும், பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு இரும்பாலை போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய தினேஷ், ரிஹான் குரோஷி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார்.