வேளாண் இடுபொருட்கள் சரக்கு ரயிலில் வருகை
விவசாய பணிகளுக்காக 1,289 மெட்ரிக் டன் வேளாண் இடுபொருட்கள் சரக்கு ரெயில் மூலம் மயிலாடுதுறை வந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி விவசாயத்தில் ஈடுபட்டனர். நடப்பு ஆண்டில் காவிரியில் நீர்வரத்து தொடர்வதால், கடந்த ஆண்டைவிட கூடுதல் நிலப்பரப்பில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் டெல்டா மாவட்ட விவசாய பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு விவசாய இடுபொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று மயிலாடுதுறை வந்தடைந்தது.
வேளாண் இடுபொருட்கள்
இதில், 664 மெட்ரிக் டன் யூரியா, 191 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 314 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 60 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட், 60 மெட்ரிக் டன் அமோனியம் குளோரைடு என மொத்தம் 1,289 மெட்ரிக் டன் வேளாண் இடுபொருட்கள் வந்தன. அந்த வேளாண் இடுபொருட்களை மாவட்ட இணை இயக்குனர் சேகர், உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் அந்த வேளாண் இடுபொருட்களை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.