அரசியல் பிரமுகர்கள் வருகை தொடக்கம்:பரபரப்படையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்;சுற்றி சுழன்று ஆதரவு கேட்கும் அரசியல் கட்சியினர்


அரசியல் பிரமுகர்கள் வருகை தொடக்கம்:பரபரப்படையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்;சுற்றி சுழன்று ஆதரவு கேட்கும் அரசியல் கட்சியினர்
x

அரசியல் பிரமுகர்களின் வருகை தொடங்கி இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்படைய தொடங்கி இருப்பதுடன், அரசியல் கட்சியினர் சுற்றி சுழன்று ஆதரவு கேட்கவும் தொடங்கி உள்ளனர்.

ஈரோடு

அரசியல் பிரமுகர்களின் வருகை தொடங்கி இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்படைய தொடங்கி இருப்பதுடன், அரசியல் கட்சியினர் சுற்றி சுழன்று ஆதரவு கேட்கவும் தொடங்கி உள்ளனர்.

தேர்தல் களம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத மரணம் அடைந்தார். அவரது மரணம் கட்சிக்கும், தொகுதிக்கும் பெரிய இழப்பு என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் மக்கள் பிரதிநிதியை தேர்ந்து எடுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருமகன் ஈவெராவின் மறைவில் இருந்து மீளாத அவரது குடும்பம், நண்பர்கள், கட்சியினர், பொதுமக்களை இந்த அறிவிப்பு பரபரப்படைய செய்து இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று தி.மு.க. அணியும், அ.தி.மு.க. அணியும் காப்புக்கட்டிக்கொண்டு அரசியல் சதுரங்க தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

சஞ்சய் சம்பத்

தி.மு.க. கூட்டணி தங்கள் தரப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை களம் இறக்கும் என்று உறுதியாக அறிவித்து விட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலும் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆனால், அந்த கட்சியின் உள்கட்சி பிரச்சினையால் யாருக்கு யார் ஆதரவு அளிப்பது என்ற குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் மறைந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் தம்பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என்பது காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து இருப்பதாக கூறி இருக்கிறார். எனவே ஓரளவு சஞ்சய் சம்பத் போட்டியிடுவது உறுதியாகவே இருக்கும் என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

ஆதரவு

காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளரை உறுதி செய்யவில்லை என்றாலும், கூட்டணி கட்சியான தி.மு.க. நேற்றே தனது பிரசாரத்தை தொடங்கி விட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் கூட்டணி கட்சியினருடன் சென்று வீதி வீதியாக மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டனர். இதனால் அரசியல் பிரமுகர்களின் வருகை ஈரோட்டை நோக்கி திரும்பி இருக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு பிரசாரத்தை தொடங்கிய நிலையில் இனி தினசரி முக்கிய பிரமுகர்களின் வருகையால் ஈரோடு தேர்தல் களம் பரபரப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வின் வேட்பாளராக கே.வி.ராமலிங்கம் களம் இறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டாக தெரிகிறது. எனவே அவர் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். கட்சி அலுவலகம், பகுதி அலுவலகங்கள் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளை நேற்று அவர் சந்தித்தார். தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட, அ.தி.மு.க. கட்சியினரின் ஆதரவையும் திரட்டி வருகிறது.

குழப்பம்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அணி சார்பில் கே.வி.ராமலிங்கம் போட்டியிடும் நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பு கட்சியினருக்கே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக அணிகள் ஏதுமின்றி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்துக்கே வாக்கு என்று இருக்கும் அடிமட்ட தொண்டர்கள் கடுமையான குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. கட்சி இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்குவது என்று அறிவித்து இருக்கும் நிலையில், அ.தி.மு.க. 2 அணிகளும் வேட்பாளர் நிறுத்தும் என்ற அறிவிப்பு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story