இலங்கையில் இருந்து இழுவை கப்பல் வருகை
கூடங்குளத்தில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்கு இலங்கையில் இருந்து இழுவை கப்பல் வந்தது.
வள்ளியூர்:
கூடங்குளத்தில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்கு இலங்கையில் இருந்து இழுவை கப்பல் வந்தது.
மிதவை கப்பல்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்து இரண்டு ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற இரண்டு நீராவி ஜெனரேட்டர்களையும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாறையில் தரை தட்டியது
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் வந்தபோது, இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இரும்பு கயிறு திடீரென்று அறுந்தது. தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக மிதவை கப்பல் கடலில் இழுத்து செல்லப்பட்டு பாறையில் தரை தட்டியவாறு நின்றது.
இதையடுத்து மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அதனை மீட்க முடியவில்லை.
இலங்கை கப்பல் வருகை
தொடர்ந்து பாறையில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்காக, இலங்கையில் இருந்து அதிக இழுவைத்திறன் கொண்ட அதிநவீன இழுவை கப்பலை கூடங்குளத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையடுத்து கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அதிநவீன இழுவை கப்பல் நேற்று மதியம் கூடங்குளத்துக்கு வந்தது. எனினும் தரைதட்டிய மிதவை கப்பலை மீட்பதற்கான பணிகளை உடனே தொடங்கவில்லை. இலங்கையில் இருந்து கூடுதலாக மற்றொரு இழுவை கப்பலை விரைவில் வரவழைத்த பின்னரே மீட்பு பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.