அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டி;  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
x

அரசு பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு

அரசு பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று தொடங்கி வைத்தார்.

கலைத்திருவிழா

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ -மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. நடனம், நாடகம், மொழித்திறன், மனப்பாடம், இசை சங்கம், பலகுரல், ஓவியம் உள்ளிட்ட 146 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வான மாணவ -மாணவிகள், வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். வட்டார அளவிலான முதல் 2 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நந்தா என்ஜினீயரிங் கல்லூரி

இந்த நிலையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நேற்று தொடங்கியது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு அந்தியூர் ஐடியல் பள்ளிக்கூடத்திலும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ்-1 பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியிலும் நேற்று தொடங்கியது.

ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜோதி சந்திரா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், ஈரோடு உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கலையரசன், கலையரசி விருது

இந்த போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றதழ்கள் வழங்கப்படும். மேலும் முதல் இடம் பிடிக்கும் மாணவ-மாணவிகள் இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருது வழங்கப்படும். மேலும் தரவரிசையில் முதன்மை பெறும் மாணவ -மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.


Next Story